வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்தில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கூறினார்.
சிவகங்கையில் நிருபர்களுக்கு, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை போன்று திமுக தலைமையிலான எங்களது கூட்டணி அமோக வெற்றி பெறும். சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா பெரியாரின் கொள்கையை தமிழகத்தில் இருந்து அகற்றுவோம் என கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிலைப்பாடு என்னவென்று இதுவரை கூறவில்லை.
மக்கள் பாஜகவின் அடிப்படைக் கொள்கையான இந்து, இந்துதுவா என்கின்ற கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழக மக்கள் பாஜக தலைவர்களின் பிரச்சாரங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வருமானவரி துறையின் சோதனை எதிர்கட்சி தலைவர்களின் வீடுகளில் நடைபெறுவதால் பா.ஜ.க.விற்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். அரசு அதிகாரிகளின் உதவியோடு தமிழகம் முழுவதும் பணம் பட்டுவாடா நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பணப்பட்டுவாடாவால் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்று அவர் கூறினார்.