கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தகட்ட தளர்வுகளை மேற்கொள்ள நாட்டில் உள்ள அனைவருக்கும் வாரத்திற்கு இரு முறை கொரோனா வைரஸ் தொற்று சோதனைகள் இலவசமாக செய்யப்பட உள்ளன.
இது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் வாரத்திற்கு இரண்டு முறை இலவசமாக கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதன் முடிவுகள் சுமார் 30 நிமிடங்களில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தங்கள் அருகில் உள்ள சோதனை தளங்களில் அல்லது வீட்டிலிருந்து ஆர்டர் செய்து பரிசோதனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் கொரோனா வைரஸ் தொற்றுகளை தடுக்க உதவும் என்றும் புதிய கொரோனா வைரஸ்களை கட்டுப்படுத்த உதவும் என்றும் கூறியுள்ளார். மேலும் எங்கள் தடுப்பூசி திட்டம் தொடர்ந்து வெற்றியை நோக்கி செல்கிறது என்றும் மிகவும் பாதுகாப்பான முறையில் தளர்வுகளை அறிவிப்பதால் புதிய வைரஸ் தொற்று ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார். பிரிட்டனில் வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் வெளிநாட்டு பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.