திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை தோட்டத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தக்கோட்டை சாலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை தனியார் தோட்டம் ஒன்றில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் குஜிலியம்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் சாலம்பட்டி பகுதியில் வசித்து வரும் விவசாயி சுப்ரமணிக்கு (65) சொந்தமான தோட்டத்தில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு மது பாட்டில்கள் சாக்கு மூட்டையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்தலை முன்னிட்டு மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, அதன்பின் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் சுப்பிரமணி மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த 402 மது பாட்டில்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.