நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஏப்ரல் 15க்குள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டிவிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்ததாக வெளியான தகவல் உண்மையல்ல என்று அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மேற்கண்ட எச்சரிக்கை செய்தி வீடியோ வடிவில் பரவியதால் தேவையற்ற அச்சம் ஏற்பட்டது. அது போலியானது என்று உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.