சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வாக்களிக்கச் சென்ற பொதுமக்கள் சென்னை திரும்ப பேருந்து இல்லாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் முழுமையாக இன்னும் பேருந்துகள் இயக்கப்படாமல் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயங்கும் 2,225 பேருந்துகளுடன் 3090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னை வர ஏதுவாக 2,115 சிறப்பு பேருந்துகளும், கோவை, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 2644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்தது.
ஆனால் சென்னையில் இருந்து வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்ற பொதுமக்கள் திரும்பி வருவதற்கு பேருந்து வசதி இல்லாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். புதுக்கோட்டை, செங்கம் காஞ்சிபுரத்தில் பேருந்துகள் இல்லாததால் இரவு முழுவதும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.