கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் நடுத்தர வயது உடையவர்களாக இருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக சுகாதாரத்துறை சுதாகர் கூறியுள்ளார்.
உலக நாடுகள் முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் மக்களை அச்சுறுத்திக் கொண்டு வருகின்றது. இந்த வைரஸ் தொற்றுக்கு சிறிய குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஆனால் 2-வது அலையாக அதிகரிக்க தொடங்கிய கொரோனாவிற்கு நடுத்தர வயது உடையவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.
இதனை கருத்தில் கொண்டு பெங்களூரில் ‘சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்’ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நமது நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி வருகின்றது. இறப்பு விகிதமும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. நடுத்தர வயது உடையவர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணம் என்னவென்று அறிவதற்கு ஆய்வு செய்ய தொழில்நுட்ப குழுவிற்கு உத்தரவு அளித்துள்ளேன். இதன் தீவிரத்தன்மையை எங்களால் இப்போது கணிக்க இயலாது. ஆனால் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயார் நிலையில் உள்ளோம்.
கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 33,697 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் 15,733 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுகைகள் இருக்கின்ற நிலையில், இதில் கொரோனா நோயாளிகளுக்கு 10,083 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் 20% ஆக உயர்த்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். அதன்பின் பொதுமக்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் ஊரடங்கு உள்பட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. நாம் அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு விடக்கூடாது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தங்களின் உயிர்களை காத்துக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களை வைரஸ் தாக்கினால் அவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும். ஆனால் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள். இதனால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா விழிப்புணர்வுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
சுகாதார ஊழியர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து ஊழியர்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அனைவருக்கும் ஊரடங்கு வேண்டாமென்றால் கொரோனா நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை அனைவரும் தீவிரமாக கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை சுதாகர் கூறுகின்றார்.