கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை தந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. அதனை அனுபவிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களான குணா குகை, மோயர் பாயிண்ட், அப்பர்லேக்வியூ, பசுமை பள்ளத்தாக்கு, பைன்மரக்காடு ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரியும் செய்தனர். மேலும் அங்கு இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவியது. ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்ததால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிந்தன. சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் சுற்றுலா பயணிகளின் வருகையால் மகிழ்ச்சி அடைந்தனர்.