தேனியில் கண்மாயில் தேங்கியிருக்கும் தண்ணீர் மாசடைவதை தடுக்க கோரி விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூரில் ஓட்டன்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாயிலிருக்கும் நீரை விவசாயிகள் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட அவர்களது நிலத்திற்கு பாசனம் செய்ய பயன்படுத்துகின்றன. மேலும் அப்பகுதியிலிருக்கும் கால்நடை பராமரிப்பாளர்களும் கண்மாயிலிருக்கும் நீரை உபயோகப்படுத்துகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியிலிருக்கும் இறைச்சிக் கடையிலிருந்து கழிவுகள் இக்காண்மாயில் கொட்டுவதால் அதிலிருக்கும் தண்ணீர் மாசடைகிறது.
இதனை குடிக்கும் கால்நடைகளுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் இப்பகுதியிலிருந்து சில நபர்கள் மதுவினை கொடுத்துவிட்டு கண்மாய்க்குள் பாட்டில்களை வீசுகின்றனர். இவற்றையெல்லாம் தடுக்கக் கோரி விவசாயிகள் நல சங்கத்தினர் பொதுத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்துள்ளார்கள். ஆனால் இதுவரை அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நல சங்கத்தினர் கண்மாய்க்குள் இறங்கி அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.