திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்ட வாக்கு சாவடி மையத்தில் இறந்தவரின் ஓட்டை யாரோ ஒருவர் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி மையம், கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் தேர்தலன்று கூடுதலாக ஒரு ஓட்டு வாக்குப்பதிவின் போது பதிவாகியிருந்தது. அதாவது யாரோ ஒருவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து போன அம்பேத்கர் என்பவருடைய ஓட்டை பதிவு செய்துள்ளனர். இதையடுத்து சரிபார்ப்பு படிவத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஏஜெண்டுகள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர். மேலும் மறுவாக்குப்பதிவு அந்த வாக்குச்சாவடியில் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் பசும்பொன், ஆர்.கே.சுப்ரமணி, நகர செயலாளர் முருகன், அ.தி.மு.க. கூட்டணி கட்சியினர் மற்றும் துணைச் செயலாளர் பி.முருகன் ஆகியோர் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன்பின் வாக்குச்சாவடி மையத்தில் பணி புரிந்த அலுவலர்களை கண்டித்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் வாக்குச்சாவடியில் பணியாற்றிய அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.