திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் தி.மு.க.வினரை கண்டித்து அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி அருகே தி.மு.க.வைச் சேர்ந்த ரவி, அ.தி.மு.க.வை சேர்ந்த குமரேசன் ஆகியோர் இடையே வாக்கு சேகரிப்பதில் மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் தனித்தனியே வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் குமரேசன் வீட்டிற்கு ரவி மற்றும் அவரது உறவினர்கள் சிலர் கடந்த 6-ஆம் தேதி சென்றுள்ளனர். மேலும் அங்கிருந்த பெண்களிடம் தகராறு செய்து அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன், அதிமுகவை சேர்ந்த மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் மோகன், நகர செயலாளர் குமரேசன், பீர்முகமது மற்றும் அவர்களுடைய உறவினர்கள் மற்றும் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குமரேசன் வீட்டிற்கு சென்று தகராறு செய்த தி.மு.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து அ.தி.மு.க.வினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.