திண்டுக்கல்லில் துணை ராணுவ வீரர்கள் உள்பட 226 பேர் வாக்கு எண்ணும் மையத்தில் நியமிக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 2,673 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 77 சதவீதம் பேர் மாவட்டம் முழுவதும் வாக்களித்தனர். இதையடுத்து கட்டுப்பாட்டு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குபதிவை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவை சீல் வைக்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு எந்திரங்களை மண்டல வாரியாக அமைக்கப்பட்ட குழுவினர் சேகரித்து எடுத்து வந்தனர். அவை அனைத்தும் திண்டுக்கல் அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரிக்கு வாக்கு எண்ணுவதற்காக கொண்டுவரப்பட்டது. அவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான விஜயலட்சுமி, அரசியல் கட்சியினர், தேர்தல் பார்வையாளர்கள், போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா முன்னிலையில் தொகுதிவாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கப்பட்டன. மேலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளை பாதுகாப்பதற்காக அறைகளுக்கு செல்லும் பாதையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அதிவிரைவு போலீஸ் படையினர், ஆயுதப்படை போலீசார் வாக்கு எண்ணும் மையத்தில் கட்டிடத்தின் உள் பகுதி முழுவதும் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். உள்ளூர் காவல் துறையினர் மூன்றாவது கட்டமாக வாக்கு எண்ணும் மையத்தில் நுழைவுப் பகுதி மற்றும் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதன் மூலம் 11 அதிவிரைவு போலீஸ் படை வீரர்கள், 56 துணை ராணுவ வீரர்கள், உள்ளூர் காவல் துறையினர், ஆயுதப்படையினர் என மொத்தம் 226 பேர் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் அனைவரும் சுழற்சி முறையில் ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் ஈடுபடுவார்கள். இந்த பாதுகாப்பு பணியை மேற்பார்வை செய்வதற்கு இரண்டு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 2 போலீஸ் துணை சூப்பிரண்டுகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.