சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை தனி என 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இந்த 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு செய்யப்பட்ட 2,091 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் வாக்கு எண்ணும் மையமான காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரிக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டது.
மின்னணு ஓட்டு எந்திரங்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்கனவே தயார் நிலையில் இருந்தது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதில் சட்டமன்ற பார்வையாளர்கள் முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன், சோனாவனே ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 180 கண்காணிப்பு கேமரா அந்த அறையின் சுற்றிலும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் 324 காவல்துறையினர் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.