சென்னையில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்கள் இடம் 200 ரூபாயும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், எச்சில் துப்பினாலும் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதனைப்போலவே மதுரையிலும் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 200 அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.