மதுரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் ஆலம்பட்டி கிராமத்திலிருக்கும் பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படாததால் அங்கிருந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நாகமலைபுதுக்கோட்டையில் ஒன்றாகத் திரண்டு அங்கிருந்த தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இந்நிலையில் பொதுமக்கள் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதாக கரடிப்பட்டி கிராமத்திலிருக்கும் நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் பெண்கள் உள்ளிட்ட 60 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.