நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்க திட்டமிட்டுள்ளதாக நபார்டு வங்கி தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள நபார்டு வங்கியின் மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், வங்கியின் நடப்பாண்டு திட்டங்கள் குறித்தும் கொரோனா பரவல் காலத்தில் வெற்றிகரமான லாபம் ஈட்டியது பற்றியும் தலைமை பொதுச் செயலாளர் கூறினார். மேலும் நபார்டு வங்கி மூலம் இந்த நிதியாண்டில் ரூ.27,104 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், வரும் ஆண்டில் 40 ஆயிரம் கோடி வரை கடன் உதவி வழங்க தயாராக உள்ளதாகவும் வங்கியின் தலைமை பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதனை தவிர குடிநீர் மற்றும் பாசன திட்டங்களுக்கு நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு உதவி விதி என்ற புதிய திட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கு ரூ.6, 513 கோடி வரை கடன் உதவி வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசுக்கு பல்வேறு திட்டங்களுக்காக 31 கோடி இலவச நிதியும் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட கடன்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. கிராம கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டாலும் அந்த தொகையை முறையாக திருப்பி செலுத்துவோம் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. எனவே விவசாய கடன் ரத்து செய்வதால் நபார்டு வங்கிக்கு எந்தவித சிக்கலும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.