சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சியினர் மோதி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுநல்லூரில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். மேலும் இவர் தேவகோட்டை தெற்கு வட்டார தலைவராக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வரும் அதிமுக பிரமுகர் பாண்டியன் என்பவருக்கும், இவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தலன்று அதே பகுதியை சேர்ந்த வைரவன் என்பவர் காங்கிரஸ் கட்சி பூத் ஏஜெண்டாக இருந்தார். அவரை ராஜேஷ், பாண்டியன், ஆனந்த் ஆகியோர் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரனுடைய காரையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து திருவேகம்பத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதே போல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தென்னவன், கார்த்திக், ஜீவா, பிரபாகரன், வைரவன் மற்றும் பலரும் சேர்ந்து அதிமுக பிரமுகரான பாண்டியனை தாக்கியதாக திருவேகம்பத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே தேவகோட்டை அரசு மருத்துவமனையில் காயமடைந்த பாண்டியன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எச்.ராஜா மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார். மேலும் பாண்டியன் கொடுத்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரின் மீது கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சபாபதி மருத்துவமனைக்கு சென்று எச்.ராஜாவை சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டார்கள்.