பிரிட்டன் இளவரசர் பிலிப் மரணத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரிட்டன் இளவரசர் பிலிப் நேற்று உயிரிழந்ததாக வெளியான செய்தியை அறிந்த பிரிட்டன் மக்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இளவரசர் பிலிப் மரணத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த புகைப்படத்தில் இளவரசர் பிலிப்பும் அவருடைய மனைவியான இரண்டாம் எலிசபெத் மகாராணியும் சோபாவில் அமர்ந்து ஒரு அட்டையை பார்த்து சிரித்து பேசிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது. அதாவது அவர்களுடைய பேரப்பிள்ளைகள், இளவரசர்கள் ஜார்ஜ், லூயிஸ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகியோர் அளித்த வீட்டில் உருவாக்கப்பட்ட அட்டை தான் அது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 20ஆம் தேதியில் அவர்களது 73 வது திருமண வருடத்தை நிறைவு செய்ததை குறிக்கும் விதமாக வண்ணங்கள் நிறைந்த அட்டை தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதனை பெர்க்ஷைரில் உள்ள வின்ஸ்டர் கோட்டையில், இளவரசர் பிலிப் மற்றும் மகாராணி இருவரும் சோபாவில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் காண்பதை நாம் பார்க்க முடிகிறது. மேலும் இந்த இடத்தில் தான் இளவரசர் தன் இறுதி காலத்தை வாழ்ந்து சென்றிருக்கிறார்.