வால்பாறை தாவரவியல் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களை பொருத்தம் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் வால்பாறையில் நுழைவு வாயிலில் இருக்கும் பி.ஏ.பி காலனியில் 5 கோடி ரூபாய் செலவில் 4.25 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பூங்காவில் தற்போது பல வண்ணங்களில் பூக்கக்கூடிய மலர்ச்செடிகள், பல ஆண்டுகள் வாழக்கூடிய மரங்கள் மற்றும் நிழல் தரும் மரங்கள் என ஆயிரக்கணக்கான செடிகள் நடப்பட்டுள்ளன.
இதனையடுத்து பல வண்ணங்களை கொண்ட தண்ணீரை பீச்சி அடிக்கும் செயற்கை நீரூற்றுகளை இந்த தாவரவியல் பூங்காவின் மையப்பகுதியில் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. இந்நிலையில் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் விளையாட்டு உபகரணங்களை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கடந்த பிப்ரவரி மாதத்தில் பூங்கா திறக்கப்படும் ஒரு சில பணிகள் மட்டும் இன்னும் முடிவடையாமல் உள்ளது எனவும், அந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அடுத்த மாத இறுதியில் நடைபெறும் கோடை விழாவுக்கு முன்னராகவே அனைத்து பணிகளையும் முடித்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் பூங்கா சிறப்பாக தயார் ஆகிவிடும் என தெரிவித்துள்ளனர்.