சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் அடைப்புகளை சரி செய்ய தூய்மை பணியாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் அடைப்புகளை சரி செய்ய பொதுமக்கள் தூய்மை பணியாளர்களை தன்னிச்சையாக நேரடியாக ஈடுபடுத்தக் கூடாது என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி தொழிலாளி இறந்தால் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மீது 10 லட்சம் ரூபாய் இழப்பீடு, 2 லட்சம் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.