கனடாவில் பணியாற்றி வரும் இந்திய இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த ரேணு சூரிய பிரசாத் முரிகிபிடி என்ற 29 வயது இளைஞர் கனடாவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் முதுகலை பொறியியல் பட்டதாரி ஆவார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி ரேணுவின் பெற்றோர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். அவர் தொலைபேசி அழைப்பை ஏற்காததால் அவரது நண்பர்களை தொடர்பு கொண்டுள்ளனர்.
இதனால் அவரின் நண்பர்கள் ரேணுவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். பிரேத பரிசோதனையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் அவரின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர். இதனிடையே கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் கனடாவிலிருந்து இந்தியாவிற்கு ரேணுவின் உடலைக்கொண்டு வருவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள நடைமுறைகளை முடித்துவிட்டு அவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர அதிகபட்சம் 12 நாட்கள் வரை ஆகும். இந்நிலையில் இதற்கு இந்திய அரசாங்கம் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ரேணுவின் உறவினரான காவியா என்பவர் கூறுகையில், “ரேணு அவரின் சகோதரி மற்றும் பெற்றோருக்காகத்தான் கனடாவிற்கு சென்றார், அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை, மேலும் கொரோனா காலகட்டம் வேறு என்பதால் தற்காலிகமாக தான் பணியாற்றி வந்தார்.
மேலும் குடும்பத்தில் பண நெருக்கடி, தங்கையின் திருமணத்திற்கு வாங்கிய கடன் என்று பல சுமைகள் அவருக்கு இருந்தது. அதிலும் சரியான பணியும் கிடைக்காத காரணத்தால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகி இப்படி நடந்துவிட்டது. தற்போது ஒரு முறையாவது அவரின் முகத்தை பார்த்தால் போதும் என்று காத்திருக்கிறோம்”என்று தெரிவித்துள்ளார்.