மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் நான்காம் கட்ட தேர்தலில் பெரும் வன்முறை வெடித்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
கூச்பெகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக நிர்வாகிகள் இடையேயான மோதலில் 18 வயது இளைஞர் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் 44 தொகுதிகளில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 4ஆம் கட்ட தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் கூட்டணி வேட்பாளர்கள் உட்பட 373 பேர் களத்தில் உள்ளனர். 5 மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளும் பதற்றமானவை என்பதால் 789 கம்பெனி துணை ராணுவப் படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிற்பகல் 1 மணி நிலவரப்படி 34.43% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே கூச்பெகர் தொகுதியில் உள்ள சித்தாள்குறிச்சி நகரில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் முதல் தலைமுறை வாக்காளர் 18 வயது இளைஞர் உட்பட நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை அடுத்து அந்த பகுதிகளில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் துணை ராணுவ படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதையடுத்து கூச்பெகர் தொகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக சிறப்பு தேர்தல் பார்வையாளர்கள் அளித்த தகவலையடுத்து சித்தாள்குறிச்சி நகரில் 125வது வாக்குச்சாவடி மையத்தில் தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தொகுதியில் பாஜக தலைவரின் காரை உள்ளூர் மக்கள் அடித்து நொறுக்கினர். காரில் அமர்ந்திருந்த அவரை துணை ராணுவ படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.