நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் காரைக்காலில் இருந்து கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்பேரில் கீழ்வேளூர் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காவாலக்குடி அம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அவர் சாராயம் விற்ற தெரியவந்தது. மேலும் அவர் ஆந்தக்குடி அறுபதாம் கட்டளை பகுதியில் வசித்து வரும் பழனிவேல் (58) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக பழனிவேல் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர்.