தமிழகத்தில் தேர்தல் நாளன்று பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொள்ள தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு வாக்கு இயந்திர கோளாறுகள் சரி செய்யப்பட்டு, மக்கள் அனைவரும் வாக்களித்தனர். அதிலும் சில கட்சிகள் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி கலவரம் செய்தனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78% வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள், குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் அந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் மாதத்தில் ஏதாவது ஒரு நாள் விடுமுறை எடுக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வாக்குச்சாவடி பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் இந்த மாதத்திற்குள் விடுமுறை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.