திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை மலைக்கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் கோலாகலமாக திருவிழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை மலைக்கிராமத்தில் சிறப்பு வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6-ஆம் தேதி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு வாணவேடிக்கையுடன் அழகாயி ஊற்றிலிருந்து அம்மன் கரகம் அலங்கரித்து கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது.
அதன்பின் பொங்கல் வைத்து சக்தி கிடா வெட்டுதல் மதியம் நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும் செய்யப்பட்டது. கரகாட்டம் நிகழ்ச்சி இரவில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் பூஞ்சோலை சென்றடைந்தது. பொதுமக்களும், கோவில் நிர்வாகிகளும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.