வேலூர் மக்களவை தொகுதியை விட்டு மற்றவர்கள் மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டுமென்று தமிழக தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என மும்முனைப் போட்டியாக அரசியல் காட்சிகள் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தை தொடங்கினர். இன்று மாலை 6 மணியோடு வேலூர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ள கருத்தில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். தேர்தல் பிரச்சாரம் தொடர்பான பொதுக்கூட்டம் , ஊர்வலத்தை யாரும் நடத்தவோ , ஒருங்கிணைக்கவோ கூடாது.
மேலும் , தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக தொலைக்காட்சி , வாட்ஸ் அப் , முகநூல் போன்றவற்றை அணுகக் கூடாது. மக்களை கவருகின்ற நிகழ்ச்சி , பொழுதுபோக்கு சாதனங்கள் மூலம் பிரச்சாரம் செய்யக்கூடாது. தொகுதியில் பிரச்சாரத்திற்காக வெளியிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும். மேலும் கருத்துக்கணிப்புகள் வெளியிடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.