வனப்பகுதியில் ஆண் சிறுத்தை இறந்த விவகாரம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை வனப்பகுதியில் மான், சிறுத்தை, காட்டு யானைகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் நுழைந்து அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் காரமடை பகுதியில் இருக்கும் மானார் என்ற பகுதியில் வன ஊழியர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அந்த இடத்தில் தேடிப் பார்த்தபோது சிறுத்தை ஒன்று அங்கு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக ஊழியர்கள் மாவட்ட வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்ததால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை டாக்டர் சுகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, சுமார் ஐந்து வயதுடைய இந்த ஆண் சிறுத்தை இறந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த சிறுத்தை உடல்நலக்குறைவு காரணமாக இருந்ததா அல்லது வனவிலங்குகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.