தமிழகத்திலேயே முதன் முதலாக மாசு ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்ட தனியார் பேருந்து சிவகங்கையில் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியிலிருந்து தேவகோட்டைக்கு முதன்முதலாக மாசு ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்ட தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இதில் ஸ்டேஜ் 6 பொருத்தப்பட்டுள்ளது. இது மைக்ரோ அளவிலேயே புகையை விடும். நுண்ணிய கரித் துகள்களை வெளியிடாது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பெரிதும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.