13 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன கவுண்டன்அள்ளி பகுதியில் வசிக்கும் டிரைவரான தேவராஜ் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கு சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கலைவாணி இது குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்து அவரை கர்ப்பமாக்கிய டிரைவரான தேவராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.