தொகுப்பாளினி ஹிந்தியில் பேசியதால் மேடையிலிருந்து கீழே இறங்கியது குறித்து ஏ ஆர் ரஹ்மான் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி இசையமைத்து தயாரித்துள்ள திரைப்படம் 99 சாங்ஸ். சமீபத்தில் சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ஹிந்தியில் பேசியதால் ஏ ஆர் ரஹ்மான் மேடையிலிருந்து கீழே இறங்கிய வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஏ ஆர் ரஹ்மான் ’99 சாங்ஸ் படம் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே ஹிந்தி புரோமோஷன் முடிவடைந்த நிலையில் தமிழ் ரசிகர்களுக்கான புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது .
இதனால் தமிழில் தான் பேசவேண்டும் என நான் தொகுப்பாளினியிடம் கூறியிருந்தேன். ஆனால் அவர் இந்த படத்தின் கதாநாயகன் இஹானுக்கு புரிய வேண்டும் என்பதற்காக ஹிந்தியில் சில வார்த்தைகள் பேசினார். இதனால் ஹிந்தி என அவரிடம் கூறிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினேன் . இதில் எந்தவிதமான சீரியஸ் நடவடிக்கையும் இல்லை. ஹிந்தி காரர்களை அழைத்து வந்ததால் ஹிந்தியில் பேசுகிறார்கள் என யாரும் நினைத்து விடக்கூடாது . இந்த சம்பவத்தின் மூலம் அந்த தொகுப்பாளினி என் படத்திற்கு மிகப் பெரிய விளம்பரம் தேடித் தந்து விட்டார். இதற்காக போனில் அவருக்கு நன்றி தெரிவித்தேன்’ எனக் கூறியுள்ளார்.