திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 1 மணி நேரம் பெய்த கனமழையால் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
கடந்த சில தினங்களாக பழனியில் கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கொளுத்தும் வெயிலால் அவதி அடைந்து வந்தனர். இதன்காரணமாக தர்பூசணி, இளநீர் ஆகிய விற்பனை கடைகள் சாலையோரங்களில் புற்றீசல் போல முளைத்துள்ளன. அந்தக் கடைகளுக்கு சென்று மக்கள் தாகம் தணித்து வந்தனர். இந்த நிலையில் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் சுமார் ஒரு மணி நேரமாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் மழைநீர் தாழ்வான இடங்களில் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல் தண்ணீர் பள்ளமான இடங்களில் தேங்கி நின்றது. மேலும் பழனி பேருந்து நிலைய பகுதியில் சாக்கடை கழிவுநீர் மழை நீருடன் சேர்ந்து பெருக்கெடுத்து ஓடியது. இவை அங்குள்ள கடைகளுக்குள் புகுந்தது. இதனால் வியாபாரிகள் கடையைத் திறக்க வந்தபோது கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து வியாபாரிகள் அந்த மழை நீரை வெளியே இறைத்து ஊற்றிய பின்னரே வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். இது குறித்து வியாபாரிகள் கூறும் போது, சுமார் 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாக்கடை கழிவுநீர் மழைநீருடன் கலந்து கடைக்குள் புகுந்தத்தில் சேதமானது என்றனர்.