திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமைகள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அயனாம்பட்டியில் வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் 10 அடிக்கு இருந்தது. இந்நிலையில் அந்தக் கிணற்றுக்குள் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் காட்டு எருமைகள் கத்தின. அதனைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் கிணற்றுக்குச் சென்று பார்த்தனர். அப்போது தண்ணீரில் தத்தளித்தபடி 3 காட்டு எருமைகள் சத்தமிட்டு கொண்டிருந்தன. அதில் கன்று குட்டி ஒன்றும் இருந்தது. இதுகுறித்து அய்யலூர் வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிணற்றிலிருந்து தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி காட்டெருமைகளை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் காட்டெருமைகள் தீயணைப்பு படை வீரர்களை முட்டியது. இதனால் காட்டெருமைகள் மீட்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மயக்க ஊசி செலுத்தி அந்த காட்டெருமைகளை மீட்க முடிவு செய்தனர். இதற்காக கால்நடை மருத்துவ குழுவினர் கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டனர். அவர்கள் காட்டெருமைகளுக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி காட்டெருமைகளை மயக்கமடைய செய்தனர். அதன்பின் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆண் காட்டெருமை ஒன்றும், கன்றுக்குட்டியும் மீட்க்கப்பட்டது. ஆனால் பெண் காட்டெருமை இறந்து விட்டது. தீயணைப்பு துறையினர் அதன் உடலையும் மீட்டனர். மேலும் மீட்கப்பட்ட ஆண் காட்டெருமை, மற்றும் கன்றுக்குட்டியை வனப்பகுதியில் விட்டனர்.