பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் திருச்சி உறையூர் கைத்தறி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து சுங்கச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஏஐடிஇசி நிருவாகிகள் பங்கேற்றனர். பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டமைப்பின் பொது செயலாளர் க. உமாஷ் சாலை பராமரிப்பு உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படாமல் சுங்க வரி உயர்வு காரணமாக சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்குமான முரண்பாடு ஏற்படுவதாக தெரிவித்தார்.
சுங்கச்சாவடியில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.