தேனியில் சுற்றுலாவிற்கு வந்த வாலிபர் அங்கிருக்கும் அணையில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் மருந்து விற்பனை செய்யும் மதன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது 3 நண்பர்களுடன் தேனியிலிருக்கும் மேகமலைக்கு சென்றார். அப்போது அவர்கள் அப்பகுதியிலிருக்கும் சுற்றுலா தலங்களையும், அணைப்பகுதியின் நீரையும் கண்டு ரசித்தனர். அதன்பின் மதன் அங்கிருக்கும் அணையில் குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து அவர் அணையில் குளிக்கும் ஆர்வத்திலிருந்ததால் ஆழமான பகுதிக்கு சென்றதை மதன் கவனிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அவர் அணையின் நீரில் மூழ்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மதனின் நண்பர்கள் அவரை காப்பாற்றும்படி அக்கம்பக்கத்தினரை அழைத்தனர். இதற்கிடையே உத்தமபாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததால் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அணையின் நீரில் மூழ்கிய அவரை தேடும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.