திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் அன்ன சமுத்திரம் கண்மாய் பாலத்தின் கீழ் கிடந்த ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் கண்மாய் பாலத்தின் கீழ் பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக அம்மைநாயக்கனூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் சடலமாகக் கிடந்தவர் 30 அடி உயரத்தில் உள்ள பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூறினர்.
மேலும் அவருடைய வலது புறம் நெஞ்சில் ஜிஎம்பி என்று பச்சை குத்தியிருந்தார். அவர் 30 வயது உடையவராகவும் இருந்தார். இதையடுத்து காவல்துறையினர் அவருடைய உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் ? அவர் யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.