சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 51 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசகுளத்தில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். மானாமதுரை பைபாஸ் ரோட்டில் வசித்து வரும் முருகேசனுக்கும், இவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின் போது முன்விரோதம் இருந்துள்ளது. இவர்கள் இருவரும் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்கள். இந்நிலையில் வாக்குச்சாவடியில் சட்டமன்ற தேர்தலில் பணியில் ஈடுபட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரையொருவர் இருவரது ஆதரவாளர்களும் தாக்கி கொண்டனர்.
இதையடுத்து பால்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சங்கரலிங்கம், முருகேசன் உட்பட 33 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் முருகேசன் மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பழனிகுமார், பால்பாண்டி உட்பட 18 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர். இதில் மொத்தம் 51 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.