நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக காவலாளியை கணவன் மனைவி இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சொக்கனூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு டாக்டரான ராஜன் என்பவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்கு சொக்கனூரில் சொந்தமாக நிலம் ஒன்று உள்ளது. இந்நிலையில் சொக்கனூரில் வசித்து வரும் கிட்டுசாமி என்பவரை தனது நிலத்தை கண்காணிக்க காவலாளியாக ராஜன் நியமித்துள்ளார். மேலும் அவரது உறவினரான முத்துக்குமார் என்பவருக்கும் இடையே அந்த நிலம் தொடர்பாக ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் முத்துக்குமாரும் அவரது மனைவி மனோன்மணி என்பவரும் சொக்கனூரில் உள்ள நிலத்தில் குடிசை அமைத்து உள்ளனர்.
இதனைப் பார்த்ததும் அங்கு காவலாளியாக பணிபுரிந்து வந்த கிட்டுசாமி அவர்களை தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கோபமடைந்த முத்துக்குமாரும், அவரது மனைவி மனோன்மணியும் இணைந்து காவலாளியை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கிட்டுசாமி அளித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதோடு தலைமறைவான அவரது மனைவி மனோன்மணியை வலைவீசி தேடி வருகின்றனர்.