ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், 4 ரன்கள் வித்தியாசத்தில், பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது .
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 4 லீக் போட்டியில் , ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது . முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேல் ராகுல் -மாயங் அகர்வால் களமிறங்கினர் . 14 ரன்களை எடுத்து மாயங் அகர்வால் ஆட்டமிழந்தார் .பின் களமிறங்கிய கிரிஸ் கெய்ல் -கேல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்து, அதிரடியாக விளையாடினர். 28 பந்துகளில் 40 ரன்களை எடுத்து, கிரிஸ் கெய்ல் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா ,கேஎல் ராகுலுடம் இணைந்து ,அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .
30 பந்துகளில் கே எல் ராகுல் அரைசதம் அடித்தார். இதைத்தொடர்ந்து 20 பந்துகளில் தீபக் ஹூடா 1 பவுண்டரி மற்றும் 6சிக்ஸர்களை அடித்து விளாசி அரைசதமடித்தார். தீபக் ஹூடா 64 ரன்களை ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பூரன் முதல் பந்திலேயே அவுட்டானார். 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை அடித்து 91 ரன்களை குவித்த கேஎல் ராகுல்,கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை எடுத்தது. அடுத்து ராஜஸ்தான் அணி 222 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸ்- மனன் வோரா களமிறங்கினர். முதல் ஓவரிலேயே பென் ஸ்டோக்ஸ் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து மனன் வோரா 12 ரன்களில் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவருடன் இணைந்து விளையாடிய ஜோஸ் பட்லர் 25 ரன்கள் ,ஷிவம் டூபே 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் . ரியான் பராக் 3 சிக்சர் , 1 பவுண்டரி அடித்து 25 ரன்களில் வெளியேறினார். ஒருபுறம் ராஜஸ்தான் அணி விக்கெட்டுகளை இழக்க ,மறுபுறம் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை ஆடி சதமடித்து அசத்தினார் . தனி ஆளாய் நின்று போராடிய சஞ்சு சாம்சன், அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றார். ஆனால் கடைசி ஓவரில் சற்று தடுமாறியது. இறுதி ஓவரில் சஞ்சு சாம்சன் 119 ரன்களை எடுத்து கடைசி பந்தில் வெளியேறினார். இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து தோல்வியை சந்தித்தது. பரபரப்பான இறுதிகட்டத்தில் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.