தமிழகத்தில் திருவள்ளூர் முதல் குமரி வரை 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் வருகின்ற 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. கிழக்குக் கடற்கரைப் பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும். மீன்களின் இனப்பெருக்கம் காலத்தை கருத்தில்கொண்டு 61 நாட்களுக்கு இந்த தடை நடைமுறையில் இருக்கும். இந்த உத்தரவை மீறி கடலுக்குச் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.