காஞ்சியில் மர்ம நபர்கள் வக்கீலை ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் காரையில் வக்கீல் தொழிலை செய்து வரும் அழகரசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது நண்பருடன் அவரது கிராமத்திற்கு போகும் வழியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்கள் ஆட்டோவில் வந்து அழகரசனை பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர் இதனால் அவர் கத்திக் கூச்சலிட்டு சாலையில் ஓடியுள்ளார். ஆனால் விடாமல் துரத்திய மர்மநபர்கள் அழகரசனை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் அழகரசனை காப்பாற்ற முயன்றதால், அவரையும் மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் காவல்துறையினர் அழகரசனின் உடலை மீட்டு அவரது நண்பரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.