நடிகர் தனுஷ் மீண்டும் மாரி பட இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் முதல் நாளிலேயே சுமார் ரூ.10 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் d43, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் d 44, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதுதவிர கீர்த்தி சுரேஷின் சாணிக் காயிதம் படத்தை இயக்கி வரும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது .
இந்நிலையில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு குறுகிய கால தயாரிப்பில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது . ஏற்கனவே பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மாரி, மாரி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.