காளையார்கோவில் அருகே செல்லாத 1000 ரூபாய் நோட்டுகளாக இருந்த ரூ.4 3/4 கோடியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு பகுதியில் சுரேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் 1000 ரூபாய் செல்லாத நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியில் வசித்து வரும் அருள்சின்னப்பன் என்பவர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலமாக அந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறியிருக்கிறார். அதனை நம்பி வரலட்சுமி தனது தம்பி சிவகுமாருடன், செல்லாத ரூபாய் நோட்டுகளை செங்கல்பட்டிலிருந்து 3 பைகளில் நிரப்பிக் கொண்டு சென்றுள்ளார். அதன் பின் அவர்கள் அருள்சின்னப்பன் வீட்டிற்கு வந்தனர்.
அங்கு அருள்சின்னப்பனிடம் செல்லாத நோட்டுக்களை கொடுத்தனர். இதற்கிடையே காளையார்கோவில் காவல்துறையினருக்கு இதுகுறித்து ரகசிய தகவல் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அருள்சின்னப்பன் வீட்டை சுற்றிவளைத்து அவர்களைப் பிடித்தனர். அங்கு செல்லாத 1000 ரூபாய் நோட்டுகள் மொத்தம் ரூ.4கோடி 50லட்சம் அளவிற்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் அருள்சின்னப்பன், வரலட்சுமி, அவருடைய தம்பி அசோக்குமார் மூன்று பேரையும் காளையார்கோவில் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து பின் கைது செய்தனர்.