தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க கோவில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுப்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. அதன்படி கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது. கோவில் மண்டபங்களில் திருமணம் 50 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது.
மேலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடைபெற வேண்டும். அதுமட்டுமன்றி முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். திருக்கோவில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.