தமிழகத்தில் தினந்தோறும் 10 லட்சம் முகக் கவசங்கள் விற்பனை ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. அதனால் தமிழகத்தில் தினமும் சுமார் 10 லட்சம் முகக் கவசங்கள் விற்பனை ஆவதாகவும், ரூ.40 கோடி வரை வியாபாரம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. முகக் கவசம் ஒரு பண்டல் ரூ.299 முதல் ரூ.569 வரை விற்பனை செய்யப்படுகிறது.