சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் தோவாளை பூ சந்தையில் பூக்கள் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டு அன்று கோவில் மற்றும் வீடுகளில் கனி காணும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்காக திண்டுக்கல் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தோவாளை பூ சந்தைக்கு பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கின்றன. நேற்று முன்தினம் ஒரு கிலோ 850 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ, நேற்று 1,750 ரூபாய்க்கும், 300 ரூபாய் இருந்த மல்லிகைப்பூ 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதைப்போல தூத்துக்குடி பூ சந்தையிலும் பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பூ வியாபாரி கூறுகையில், நார்மலாக பூக்களின் விலை 200 ரூபாய் 250 க்கு போய்க்கொண்டு இருந்தது. இப்போது வருடப்பிறப்பு என்பதால் மல்லிகைப்பூ வாங்க கூடிய கட்டாய சூழல் என்பதால், மல்லிகைப் பூவை வாங்கி கொண்டு இருக்கிறார்கள். தெய்வசெயல்புரம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளிலிருந்து மல்லிகை பூ வருகிறது. அந்த பூ போதுமானதாக இல்லாததால் அருப்புக்கோட்டை, சங்கரன்கோவிலில் இருந்து இறக்குமதி செய்து நாம் மக்களுக்கு வினியோகம் செய்து கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தார்.
விழாக்காலம் என்பதால் பொதுமக்களும் பூக்களை வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ இன்று 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.