கொரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப் படலாம் என்ற அச்சம் காரணமாக , முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்து மற்றும் ரயில்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக மும்பை , டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து தங்களது உடமைகளுடன் குடும்பம் குடும்பமாக தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தொடங்கி இருக்கின்றனர். கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கு இடையே இ-பாஸ் முறை அமலில் இருப்பதால் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படவில்லை என்றும் இதனால் தாங்கள் கடும் அவதிக்கு உள்ளாக இருப்பதாகவும் புலம்பெயர் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கொரோனா முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக நடந்து சொந்த ஊர்களுக்கு திரும்பினர். தற்போதும் அதே போன்று ஊரடங்கு பிறப்பிக்கப் படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.