கொரோனா இரண்டாம் அலை காரணமாக குஜராத் மாநிலம் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை வெட்ட வெளியில் போட்டு எரிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. திங்கள் கிழமை ஒரே நாளில் 6021 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரமாக அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் ஐம்பத்தி ஐந்து பேர் உயிர் இழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் முறையான மருத்துவ வசதிகள் இல்லாததால் மக்கள் வேதனைப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அகமதாபாத் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து காத்து கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மூச்சுத்திணறல் காரணமாக அழைத்துச் செல்லப்பட்ட பெண் பேராசிரியர் ஒருவர் , மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் மூச்சு திணறி உயிர் இழந்ததாக புகார் எழுந்துள்ளது.
இதனிடையே , சூரத் நகரில் கொரோனானாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை வெட்ட வெளியில் போட்டு எரிக்கும் வீடியோ வெளியானதையடுத்து , சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது .