1 1/4 டன் குட்காவை கன்டெய்னர் லாரிகளில் கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள கடைகளுக்கு கன்டெய்னர் லாரிகளில் குட்காவை கடத்தி சென்று விற்பனை செய்யவதாக பூந்தமல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை சோதிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது போலீசார் அவ்வழியாக வந்த ஒரு மினி கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளான 1 1/4 டன் குட்கா பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் உடன் இருந்தவரை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஓட்டுனரின் பெயர் கௌதம் ராஜ் என்பதும் உடன் இருந்தவர் பெயர் ராமநாதன் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து கன்டெய்னர் லாரிகளில் குட்காவை ஏற்றிக்கொண்டு வந்து பூந்தமல்லி பகுதியில் வேறு ஒரு வாகனத்திற்கு மாற்றி அந்த பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்துள்ளது . அதன்பின் மினி லாரியையும், கடத்தி வந்த 1 1/4 டன் குட்காவையும், போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.