சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சரக்கு வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள சொக்கிக்குளம் பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற மகன் இருந்தார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காரைக்குடிக்கு மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சுண்ணாம்பிருப்பு-கோட்டையிருப்புக்கு இடையே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த சரக்கு வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக ராஜாவின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த சரக்கு வாகனம் கருவேல மரத்தில் மோதி நின்றது. இதுகுறித்து திருப்பத்தூர் காவல்துறையினர் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் முருகன் என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.