தாராபுரத்தில் கொரோனா அச்சம் காரணமாக பழங்கள் விற்பனை பாதியாக குறைந்துவிட்டதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்டிகைகளில் முக்கியமானது சித்திரை திருநாள். இதை ஒட்டி நடைபெறும் கனிக்காணும் நிகழ்ச்சிக்காக மா, பலா, வாழை போன்ற பழங்கள் அதிகளவில் விற்பனையாகும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் வியாபாரம் பெருமளவு குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரி கூறுகையில், “65 ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு வாங்கி போட்டு மக்கள் கொரோனாவிற்கு பயந்துகொண்டு வரவில்லை. வியாபாரம் ரொம்ப கம்மியாக இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. பைத்தியம் பிடிக்கிறது, இதை எப்படி சரி செய்ய போகிறேன் என்று தெரியவில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்பார்த்த அளவு மக்கள் நடமாட்டம் கடை வீதிகளில் இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என்று சாலையோர வியாபாரிகள் மற்றும் கடைகளில் கொள்முதல் செய்து வைத்த பழங்கள் தேங்கி விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.