தேனியில் குழந்தை திருமணம் நடந்த சிறுமியை மீட்டு அரசு அதிகாரிகள் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 13 வயது நிரம்பிய சிறுமிக்கும் 24 வயதான வாலிபருக்கும் குழந்தை திருமணம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு அமைப்பினருக்கும், சமூகநல துறையினருக்கும் தனிநபர் எவரோ புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற அரசு அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில் 13 வயதான சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதியானது. இதனால் அதிகாரிகள் சிறுமியின் பெற்றோர் உட்பட 6 நபர்கள் மீது ஆண்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். அதனை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுமியை மீட்ட குழந்தை நல காப்பக அதிகாரிகள் தேனியிலிருக்கும் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.